தமிழக அரசின் சார்பில் துவங்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியுடைய இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம் என்றும், ஆகஸ்ட் 17, 19 மற்றும் 20ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்தி ஒன்று வைரலாக பரவியுள்ளது.
இதனை நம்பிய பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுக்க தொடங்கினர். பின்னர் அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரித்தபோது, முகாம்கள் நடப்பதாக வந்த குறுஞ்செய்திகள் தவறானவை என தெரியவந்ததை அடுத்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பெண்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் போலி தகவல்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காலை முதலே ஏராளமான பெண்கள் வருகை தந்ததால், மகளிர் உரிமைத் தொகை முகாம்கள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.
இந்நிலையில் உரிமைத் தொகை கோரி மகளிர் தற்பொழுது விண்ணப்பிக்க தேவையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பொய்யான தகவல். வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. எனவே உரிமைத் தொகை கோரி மகளிர் விண்ணப்பிக்க தேவையில்லை' என அமைச்சர் கீதா ஜீவன்தெரிவித்துள்ளார்.