அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் (05.11.2024) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது, இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான அதிக இடங்களைப் பெற்று இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி எனும் பட்சத்தில், டொனால்ட் டிரம்ப் 295 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள முக்கியத்துறைகளில் தற்போதைய தலைவர்கள் மாற்றப்பட்டு புதியதாகத் தலைவர்கள் நியமிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் (Central Intelligence Agency) தலைவராக யார் நியமிக்கப்பட உள்ளார் என்று அந்த நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கஷ்யப் பட்டேல் சி.ஐ.ஏ.வின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் சொன்னால் எதையும் செய்யக் கூடியவர் கஷ்யப் பட்டேல் என்று கூறப்படுகிறது. இவர் பாதுகாப்புத் துறையில் டிரம்பிற்கு வலதுகரமாக திகழ்ந்து வந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கஷ்யப்பட்டேல் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றியவர் ஆவார். ட்ரம்ப் அதிபராக பணியாற்றிய போது அவரின் பாதுகாப்புத்துறை சார்ந்த முக்கிய செயல்பாடுகளில் கஷ்யப்பட்டேல் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். இவரின் மூதாதையர்கள் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.