சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அண்ணாமலை நகர் காவல்துறை சார்பில் மாடு வளர்ப்போர் மற்றும் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் பங்கேற்று சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் எவ்வாறு விபத்து நடைபெறுகிறது. இதுவரை தெருவில் திரியும் மாடுகளால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள். காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், உடல் உருப்புகளை இழந்தவர்கள் விரிவாக குறித்துப் பேசினார். எனவே மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் மனித உயிர்களை பாதுகாக்க மாடுகளை தெருவில் விடக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியும் சாலையில் மாடுகள் திரிந்தால் கண்டிப்பாக மீண்டும் மாடு உரிமையாளர்களுக்கு மாடுகளை ஒப்படைக்க முடியாது. இது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் தெருவில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு படக்காட்சி காண்பிக்கப்பட்டது. ஒலிபெருக்கி மூலம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.