பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஏற்கனவே பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியர் நாகமணி தலைமையில் புரவலர் திட்டம் தொடங்கப்பட்டது. புரவலர் திட்டம் என்பது பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர் என அனைவரும் குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரம்முதல் விருப்பம்போல ஆயிரத்தின் மடங்கு நிதியை செலுத்தி புரவலர் திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்துகொள்ளலாம்.
புரவலர் திட்ட தொகைகள் அனைத்தும் வங்கிகளில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும். அதேபோல் கலை, இலக்கிய, உடற்றிர போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்குப் பள்ளியின் சார்பில் பரிசுகளும் வழங்கப்படும்.
முதற்கட்டமாக இன்று (23.06.2021) பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட ரூ. 50 ஆயிரம் தொகையினைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள் மணி, ராதாகிருஷ்ணன், உதவி ஆசிரியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் கலா தங்கராசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், முன்னாள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.