கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செரின்(38). 2019ஆம் ஆண்டு கோவை ப்ரோஸோன் மாலில் ‘வின் வெல்த் இண்டர்நேஷனல்’ என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவர் நிறுவனத்தில் 20,000 ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 1,600 ரூபாய் வீதம் 25 வாரங்களுக்கு 40 ஆயிரமாக தரப்படும் என்று விளம்பரம் செய்தார்.
மேலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு தகுந்தார்போல் தங்கம் அல்லது வைர நாணயமோ நகையோ வழங்கப்படும் என்றும் கூடுதலாக விளம்பரம் ஒன்றையும் செய்தார்.
இந்த விளம்பரத்தை நம்பி தமிழக மற்றும் கேரள மக்கள் பலரும் இவர் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பின்னர் முதலீட்டாளர்களுக்கு சில வாரங்கள் சரியாக பணம் கொடுத்த செரின், தற்போது சில வாரங்களாக பணம் தராமல் தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து முதலீட்டாளர்களில் ஒருவரான சேவியர் என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் தலைமறைவான செரினை தேடிவந்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று வாளையார் சோதனைச் சாவடியில் செரினை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இருந்து 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததும் மும்பையில் தங்கம் மற்றும் வைர வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரது மனைவி ரம்யா மற்றும் நிறுவன ஊழியர்களான சைனேஷ், ராய், பைஜுமோன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார்.