Skip to main content

சத்துணவு ஆயாக்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் பணி; வாக்குப்பதிவு பாதிக்கும் அபாயம்!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

Polling Officer Job for Workers tn assembly election

 

வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர் நிலை - 2 என்ற முக்கியத்துவம் வாய்ந்த பணி சத்துணவுப் ஆயாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு விகிதம் குறையும் அபாயம் உள்ளதாக அதிருப்தி கிளம்பியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏப். 4ஆம் தேதி மாலை 07.00 மணிக்குப் பரப்புரை முடிவடைகிறது. வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

 

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இரண்டு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்களுக்கு சனிக்கிழமை (ஏப். 3) பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் - 1, 2, 3 என குறைந்தபட்சம் நான்கு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

 

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர் - 2 என்ற பொறுப்பில், வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை 600- க்கும் மேற்பட்ட சத்துணவு மைய ஆயாக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு ஆயாக்கள் 5ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள் என்பதால், வாக்குப்பதிவின்போது தனி பதிவேட்டில் வாக்காளர் பெயர்களை எழுதி, அதில் கையெழுத்து பெறுவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்படும். இதனால் வாக்குப்பதிவு விகிதம் குறையும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

 

இது தொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நம்மிடம் பேசினர். “தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களுக்குத்தான் பணி ஒதுக்கப்படுகிறது. இதில் தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்கு அடுத்து, வாக்குச்சாவடி அலுவலர் - 2 என்ற நிலையில் நியமிக்கப்படும் ஊழியருக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது.

 

அதாவது, வாக்குச்சாவடி அலுவலர் - 2 என்பவர், ஒரு வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளரின் பெயரைப் பதிவேட்டில் கைப்பட எழுதி, அதற்கு நேராக வாக்காளரிடம் கையெழுத்து அல்லது விரல் ரேகை பெற வேண்டும். அடுத்து, வாக்காளரின் இடக்கை ஆள்காட்டி விரல் நகத்தை துணியால் துடைத்துவிட்டு அதில் அழியாத மை வைத்துவிட வேண்டும். 

 

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணிகளில், முதன்முறையாக சத்துணவு மைய ஆயாக்களை நியமித்துள்ளனர். அவர்களில் 99 சதவீதம் பேர் 5ஆம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள். அவர்களின் பெயரையே எழுத்துக்கூட்டித்தான் எழுதும் நிலையில் உள்ளனர். 

 

அவர்கள், வாக்காளரின் பெயர்களை எழுத்துக்கூட்டி எழுதவே அதிக நேரம் தேவைப்படும். இதனால் வாக்குப்பதிவுக்கு தாமதம் ஆவதோடு, வாக்குப்பதிவு விகிதமும் இந்தமுறை கணிசமாக குறையவும் வாய்ப்புள்ளது. இதில் தேர்தல் ஆணையத்திற்கு உள்நோக்கம் இருக்கிறதா எனத் தெரியாது. ஆனால், இந்தப் புதிய நடைமுறையைத் தவிர்ப்பது நல்லது. வேண்டுமானால் சத்துணவு ஆயாக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவுக்கான பொத்தானை இயக்கும் வாக்குச்சாவடி அலுவலர் - 3 பணி வழங்கலாம்.

 

இது மட்டுமின்றி, வாக்குச்சாவடி பணி ஒதுக்கீட்டில் இன்னும் சில குறைபாடுகளும் உள்ளன. தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பலருக்கு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதுதான் முதல் தேர்தல் பணி. 

 

எடுத்த எடுப்பிலேயே அவர்களுக்கு மிகுந்த பொறுப்புள்ள தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது ஆபத்தானது. வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடு நடந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியாது. 

 

இதுமட்டுமின்றி, 2,800 ரூபாய் தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் பணியிலும்; 4,600 தர ஊதியம் பெறும் அனுபவம் வாய்ந்த பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் - 1, 2, 3 பணிகளில் நியமிக்கப்பட்டுள்ள அபத்தங்களும் நடந்துள்ளன. 

 

காலங்காலமாக தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. ஆனாலும், வாக்குச்சாவடிகளில் சரியான பணியாளர்களை நியமிப்பதில் இப்போது வரை குளறுபடிகள் நிலவுவது வேடிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால், கம்ப்யூட்டரில் பதிவானதில் குளறுபடி நடந்துள்ளதாக அபத்தமான பதிலைச் சொல்கிறார்கள்,'' என்கிறார்கள் ஆசிரியர்கள்.

 

இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ''வாக்குச்சாவடி அலுவலர் - 2 நியமனம் குறித்து எங்கள் கவனத்துக்கும் வந்துள்ளது. அவர்களுக்குப் போதுமான அளவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாளையும் (ஏப். 3) பயிற்சி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும், நெருக்கடி நிலையை சமாளிக்க ரிசர்வ் நிலையில் வாக்குச்சாவடி ஊழியர்களும் உள்ளனர். பதிவேடு பராமரிப்பில் ஏதேனும் சிக்கல் வந்தால் மாற்றுப்பணியாளர்கள் மூலம் அப்பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.