சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருபத்து நான்கு மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். இந்த சாலையில் சென்னையைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் பணி செய்துவரும் பாலசுப்பிரமணியன் என்பவர், சொந்த வேலையாக நெய்வேலி வந்துள்ளார். அங்கு வந்து பணியை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் (06.10.2021) தனது நண்பர்களுடன் நெய்வேலியிலிருந்து காரில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார். அவர்கள் சென்ற கார் திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு வாலிபர்கள் காரை உரசுவது போல் சென்று காரை வழிமறித்து நிறுத்தினார்கள். பதற்றத்துடன் காரிலிருந்து இறங்கிய சுப்பிரமணியத்திடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அவர் தனது பாக்கெட்டில் இருந்து 200 ரூபாய் பணத்தை எடுத்து கொடுக்க முயன்றார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் சாலையோரம் உள்ள கிராமத்திலிருந்து வந்த இருவர், கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு அருகில் வந்தனர். அவர்களைக் கண்டதும் மிரட்டிப் பணம் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் தங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று பயந்து தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். பாலசுப்ரமணியம், அதே நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் காரை மறித்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியது குறித்து புகார் கூறியுள்ளார்.
உடனடியாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற திசையில் வேகமாக தங்களது வாகனத்தை செலுத்தி, ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். அதில் ஒரு கொள்ளையன் தப்பிச் சென்றுவிட, ஒருவரை மட்டும் கைது செய்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில், அவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரசாத் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பிரசாத் வைத்திருந்த இருசக்கர வாகனம், பணம் பறிக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.