ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியைச் சேர்ந்தவர் தனசேகரன். 45 வயதான இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் பேஸ்புக்கிலும் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவரது பேஸ்புக்குக்கு காயத்ரி என்ற பெயரில் நட்புக்கான அழைப்பு வந்ததும், அதனை பார்த்துள்ளார். அதில் அழகான ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தையடுத்து அந்த நட்புக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் பேஸ்புக்கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது ஒரு முறை தனக்கு வாய் பேச முடியாது, தனக்கு திருமணம் ஆகி கணவர் வெளிநாட்டில் உள்ளார். இங்கு தான் மடடும் வீட்டில் தனியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செல்போன் எண்களை பறிமாறிக்கொண்ட இவர்கள், அடிக்கடி வாட்ஸ்அப்புகளில் டைப் செய்து தகவல்களை பரிமாறிகொள்வார்கள். ஒரு முறை வாட்ஸ்அப்பில் தனது சிசிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உடனே தனசேகரன், தான் உதவி செய்வதாகவும், மதுரைக்கு வந்துவிட்டால் பணம் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு, நாகர்கோவில் வந்துவிடுங்கள் என பதில் வந்திருக்கிறது.
அதனை நம்பிய தனசேகரன் நாகல்கோவில் சென்றுள்ளார். வடசேரி பேருந்து நிலையத்தில் நின்ற தனசேகரனை நெருங்கிய ஒருவர், காயத்ரியின் தம்பி என்று கூறி தனசேகரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றார்.
அவரை தெங்கம்புதூர் அருகே அந்த வாலிபர் அழைத்துச் சென்றார். அங்கு மேலும் ஒரு வாலிபர் இருந்தார். 2 வாலிபர்களும் சேர்ந்து தனசேகரனை தாக்கி செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்தனர். ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.80 ஆயிரம் எடுத்தனர்.
அதன்பிறகு தனசேகரனை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி ரெயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். வடசேரி போலீஸ் நிலையத்திற்கு சென்ற தனசேகரன் , தான் பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகியது முதல் பணம் பறிபோனது வரை நடந்ததை சொல்லி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் குமரி மாவட்ட காரங்காடு கல்லுவிளையை சேர்ந்த பொன்னுலிங்கம் (30), செருப்பங்கோடை சேர்ந்த சிவலிங்கம் (34) என தெரிய வந்தது.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெண் போல வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கருத்துக்களை பதிவிட்டு ஏமாற்றியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் இருவரும் இதனையே வாடிக்கையாக கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பொன்னுலிங்கம், சிவலிங்கத்தை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.