'மசினகுடி' என்ற பெயரை எளிதில் மறந்திருக்க முடியாது. அண்மையில் நீலகிரி மாவட்டம் மசினகுடியில் காட்டு யானை ஒன்றின் மீது டயரில் தீ வைத்து வீசப்பட்ட மனிதத் தன்மையற்ற செயலால் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மசினகுடியில் காட்டு யானை உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக வருவது வழக்கம்.
அப்படி உலாவரும் யானைகளில் ஒன்றுதான் 'ரிவால்டோ' யானை. காட்டு யானைகளின் குணாதிசயங்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது 'ரிவால்டோ' யானை. மனிதர்களுடன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பழகிய காட்டு யானை ரிவால்டோவுக்கு தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணாமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையறிந்த வனத்துறையினர் யானையை முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுசெல்ல திட்டமிட்டனர். யானையை அழைத்துச் செல்வதென்றால், அதிலும் குறிப்பாக காட்டு யானையை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதென்றால் மயக்க ஊசி, கும்கி யானை என அவற்றின் உதவி இல்லாமல் அழைத்துச் செல்வது சாத்தியமற்றது. ஆனால் ரிவால்டோ மனிதனைத் தாக்கும் தன்மையற்ற யானை என்பதாலும், வண்டியில் ஏற்றினால் தும்பிக்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சிரமம் ஏற்படும் என்பதாலும் நடக்க வைத்தே அழைத்துச் செல்ல திட்டமிட்டனர் வனத்துறையினர்.
வனத்துறையின் முயற்சிபடி யானை நேற்று (04.02.2021) இரண்டாம் நாளாக 9 கிலோமீட்டர் தூரம் நடந்தது. பழங்கள், தண்ணீர் பாட்டில்களைக் காட்டிக் காட்டி, சின்ன குழந்தையைப்போல ஆசைக் காட்டி வனத்துறையினர் ரிவால்டோவை பொடி நடையாய் நடக்க வைத்து அழைத்து சென்றனர். நேற்று மாலை, தெப்பக்குளம் பகுதிக்குச் செல்லும் தூரத்தில், மொத்தம் 18 கி.மீ, பாதியைக் கடந்தது ரிவால்டோ.
நேற்று இரவு யானையை நிறுத்தி வைத்துவிட்டு, காலையில் பயணத்தை தொடரலாம் என வனத்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில், மாலை 6 மணியளவில் மசினகுடி சோதனைச்சாவடி பகுதியில் வரும்போது, திடீரென ரிவால்டோ யானை மிரண்டு காட்டுக்குள் ஓட்டம் எடுத்தது. வனத்துறையினர் பின்தொடர்ந்தும் தப்பி ஓடிய காட்டு யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “வேறு ஒரு காட்டு யானையின் வாசத்தை அது உணர்ந்ததால் மிரண்டு ஓடியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர். இரவு நேரமானதால் யானையை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டது.
இன்று காலை மீண்டும் ரிவால்டோவை தேடிப் பிடித்து, அதனை தெப்பக்காடு அழைத்துச் செல்லும் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.