புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் விவசாய கடன் தள்ளுபடி, வாரியத்தலைவர் நியமனம் மற்றும் பதவி நீட்டிப்பு ஆகிய விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடி விதித்த தடையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் மத்திய அரசின் நம்பிக்கையை இழந்துவிட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்" என்று கூறினார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரோ, "கடந்த இரண்டு ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளிலும் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. கொலை, கொள்ளை, வன்முறை என்று மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. மக்கள் வளர்ச்சியில் எவ்வித அக்கறையில்லாமல் செயல்படுகின்றது அரசு.
மத்திய அரசு நம்பிக்கையை இழந்துவிட்ட ஆளுநர் கிரண்பேடி பதவியை ராஜினாமா செய்ய கோரும் முதல்வர், அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ள அரசு பதவியில் நீடிக்க வேண்டுமா...?" என கேள்வியெழுப்பினார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் செய்யும் ஏட்டிக்கு போட்டியான லாவணி கச்சேரிகளால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.