கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் சம்பவம் நிகழ்ந்த கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். விஷச் சாராயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து விவரங்களை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அதே சமயம் உயிரிழப்பு தொடர்பாக 4 விதமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கோகுல்தாஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், “மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம், இதுகுறித்து முழுமையாக விசாரித்து, தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.