கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழ்ச்செல்வன் (45). இவர் கேரளாவில் ஆயுர்வேத மருந்து கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி இன்பவள்ளி (38). இவர்களுக்கு தனுஸ்வரன்(20), இன்பராஜ்(17) ஆகிய இரு மகன்களும் இலக்கியா(19) என்ற மகளும் உள்ளனர்.
தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 23 ஆம் தேதி கேரளாவிலிருந்து வீடு திரும்பியுள்ளார். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், இன்று பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு குமராட்சி காவல் நிலையம் வந்து, தனது வீட்டில் வைத்து மனைவி இன்பவள்ளியை குடிபோதையில் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாக சரண் அடைந்தார்.
இதையடுத்து குமராட்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, இன்பவள்ளி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீஸ் விசாரணையில் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மனைவி இன்பவள்ளி இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் எனத் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.