Skip to main content

ஜவுளித்துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை..!  

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

request to Chief Minister to save the livelihood of textile workers ..!

 

தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை கடந்த மாதம் மிகத் தீவிரமாக பரவியது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒன்றாக முழு ஊரடங்கும் இருந்தது. முதலில் சில அத்தியாவசியக் கடைகளை மட்டும் திறக்க அனுமதி கொடுத்து, தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது, கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்துவருவதால், அங்கு குறிப்பிட்ட தளர்வுகளும், தொற்று குறையாத மாவட்டங்களில் சில கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதித்து தமிழ்நாடு அரசு நேற்று (11.06.2021) புதிய ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்துள்ளது. 

 

கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் செல்ஃபோன், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விற்பனைக் கடைகள் திறக்கலாம் என்றும் டாஸ்மாக் திறக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜவுளித்துறை தொழிலாளர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர். 

 

அதில், “தமிழக முதல்வர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் கரோனாவுக்கு எதிராகவும் அதை சுத்தமாக அகற்றிவிடும் அக்கறையுடன் வேகமும் விவேகமும் மின்னலாய் செயல்பட்டுவருவது அனைவரையும் கவர்ந்துவருகிறது என்பதை இந்த உலகமே திரும்பி பார்க்கிறது. கரோனா பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்துவரும் தொழில்களில் ஜவுளித்துறையும் மிகவும் முக்கியமானது.

 

* எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

* நாங்கள் வியாபாரம் செய்யும் பில்டிங் ஓனர்க்கு வாடகை செலுத்த வேண்டும்.

* மின்சாரக் கட்டணம், டெலிஃபோன் கட்டணம் கட்ட வேண்டும்.

* GST, TDS, PF, ESI வரிகள் கட்ட வேண்டும்.

* நாங்கள் வங்கிகளில் தொழில் செய்ய கடனாக பெற்ற தொகைக்கு EMI மற்றும் வட்டி கட்ட வேண்டும்.

* ஊரடங்கு காலத்தில் கடைகள் ஒரு மாதத்திற்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளதால் கடையில் உள்ள விலையுயர்ந்த ஜவுளிகள் பட்டுச்சேலைகள் இவையனைத்தும் வீணாகியுள்ளன.

* மின்சாதன பொருட்களான A/C, ஜெனரேட்டர், கணினிகள் ஆகியவை பழுதடைந்துள்ளன. இவற்றை சரிசெய்ய வேண்டும்.

 

ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எண்ணற்ற இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கும் ஜவுளித்துறையினர் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு ஜவுளித்துறையினருக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக முதல்வரை இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறோம்.

 

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா கால விழிப்புணர்வாக மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வியாபாரம் மேற்கொள்வோம் என்று உறுதி கூறுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜவுளித் தொழில் பாதிப்பு; பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

Impact on textile industry Chief Minister M. K. Stalin's letter to the Prime Minister

 

பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்தும், அதனால் நூல் மற்றும் ஜவுளி விலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.07.2023) கடிதம் எழுதியுள்ளார். அதில் குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவல நிலையைப் போக்கிடவும், நூற்பாலைத் துறையில் மீண்டும் வேலைவாய்ப்பினைக் கொண்டுவர உதவிடும் பொருட்டும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் நூற்பாலைத் தொழிலில் 15 இலட்சம் தொழிலாளர்களைக் கொண்டு 1,500 நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இவை தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பருத்தி விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை உயர்வு, வங்கி வட்டி உள்ளிட்ட செயல்பாட்டுச் செலவு அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தைகளில், தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை நூற்பாலை சங்கம், ஜூலை 15, 2023 முதல் உற்பத்தி நிறுத்தத்தை அறிவிக்கும் அளவுக்கு, இத்துறையை ஒரு கடுமையான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் புதுப்பிக்கவும், மறுசீரமைக்கவும் மத்திய அரசு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் (Emergency Credit Line Guarantee Scheme) குறுகிய காலக் கடன்களை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பெற்ற கடனைத்  திருப்பிச் செலுத்தும் பணி  தற்போது தொடங்கியுள்ளதால்  நூற்பாலைகளுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதோடு  உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.

 

இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு மத்திய அரசால் விதிக்கப்படும் 11 விழுக்காடு இறக்குமதி வரி, இந்தியாவிற்கும், சர்வதேச அளவிலான போட்டியாளர்களுக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க விலை வேறுபாடு ஆகும். இதுதொடர்பாக தனது 16-5-2022 நாளிட்ட முந்தைய கடிதத்தில், நூற்பாலைகள் பருத்தி கொள்முதல் செய்வதற்கான ரொக்கக் கடன் வரம்பை மூன்று மாதங்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கவும், வங்கிகள் கோரும் விளிம்புத் தொகையை கொள்முதல் மதிப்பில் 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கவும் கோரியிருந்தேன். ஜவுளித் தொழிலை (நூற்பு முதல் துணிகள் வரை) பாதுகாக்க வேண்டிய அவசியம், அதனால் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் கருத்தில்கொண்டு, தனது முந்தைய வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

 

இந்தச் சூழலில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவல நிலையைப் போக்கிடவும், நூற்பாலைத் துறையில் மீண்டும் வேலைவாய்ப்பினைக் கொண்டுவரவும் உதவிடும் பொருட்டு, அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ், உரிய நிதியுதவியினை நூற்பாலைகளுக்கு வழங்கிடவும், அந்நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தினை மேலும் ஓராண்டு நீட்டிக்கவும், ஏற்கனவே பெற்ற கடனை ஆறு ஆண்டு காலக் கடனாக மாற்றி திருத்தியமைத்திடவும், இத்திட்டத்தின் கீழ் புதிய கடன்கள் வழங்கிடவும், இக்கடன்களுக்கான வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்திடவும், பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியைத் திரும்பப் பெறவேண்டும். அதன்மூலம் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். மேலும், நாட்டின் நூல் உற்பத்தியில் குறுந்தொழில் நிறுவனங்களின் கீழ் வரும் கழிவுப் பஞ்சு நூற்பாலைகள் 35 விழுக்காடு அளவிற்குப் பங்களிக்கின்றன. குறைந்த விலை துணிகளில் பயன்படுத்தப்படும் இந்தக் கழிவுப் பருத்திப் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தியாவிலிருந்து கழிவுப் பருத்தியை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்க வேண்டும்” என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.