
அரியலூரில் ஆற்றிலும் ஏரியிலும் குளிக்கச் சென்ற இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவது மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் விக்னேஷ், ஸ்ரீகாந்த், விமல் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் ஜெயங்கொண்டத்திற்கு செல்போன் வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். செல்போன் வாங்கிக் கொண்டு மூவரும் தங்கள் ஊருக்குத் திரும்பும் வழியில் உடையார்பாளையம் சிவன் கோவில் அருகே உள்ள ஜமீன் ஏரியில் குளிப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.
மூவரும் ஏரியில் இறங்கி குளிக்கும்போது விக்னேஷ் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரது நண்பர்கள் இருவரும் அவரைக் காப்பாற்ற முடியாமல், கரையேறி உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளனர். இதையறிந்து அக்கம்பக்கத்தினர் வந்து முயற்சி செய்தும் விக்னேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதையடுத்து செந்துறை ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரம் தொடர்ந்து தண்ணீரில் தேடி விக்னேஷின் உடலை வெளியே கொண்டு வந்தனர்.
இதேபோன்று ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆயிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார், நேற்று முன்தினம் மாலை, கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கிவிட்டார். அவைரைக் காப்பாற்றுவதற்காக வரவழைக்கப்பட்ட கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 12 மணி வரை தேடி நந்தகுமாரை சடலமாக மீட்டனர்.
இதேபோன்று தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (19), நேற்று முன்தினம் நண்பர்களுடன் கல்லணை கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார். அங்கே பிரவீன்குமார் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.

தண்ணீரில் மூழ்கி இறந்த 3 மாணவர்களும் பொறியியல் பட்டம் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை இழந்த அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி இறப்பது அரியலூர் மாவட்டத்தில் தினசரி சம்பவமாக நடந்துள்ளது மாவட்ட மக்களைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.