'புரெவி' புயல், கரையைக் கடந்துவிட்ட நிலையில், மன்னார் வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. நேற்றிரவு வரை மிதமான மழை பெய்த நிலையில், அதிகாலை 05.30 மணிக்கு மேல், கனமழை கொட்டி வருகிறது.
இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவின் சாலையில், மழைநீர் தேங்கிய நிலையில், காசிமேட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற கூலித் தொழிலாளி இன்று காலை, பணிக்காகச் சென்றுள்ளார். அப்பொழுது சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி சுரேஷ் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தண்டையார்பேட்டை காவல்துறையினர், உயிரிழந்த சுரேஷின் உடலைக் கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு நாளுக்கு முன்பே, சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்வதாக அப்பகுதி மக்கள், மின்வாரியத்திற்குத் தகவலளித்த நிலையில், அன்றே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இன்று இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.