சீமை கருவேல மரம், தைல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு காற்றில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்பட்டதால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் தொடர்ந்து வறட்சி மாவட்டங்களாகவே உள்ளன. ரூ.15 லட்சம் வரை செலவு செய்து சுமார் 1100 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் கூட போதிய தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வறட்சி காரணமாகத் தனியார் நிலங்களில் உள்ள தைல மரக்காடுகளை அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே அழித்தனர். மற்றொரு பக்கம் தமிழக வனத்துறை தைல மரக் காடுகளின் நிலப்பரப்பை அதிகரித்தது. இதனால், வனத்துறையின் தைல மரக் காடுகள் உள்ள கிராமங்களில் உள்ள ஏரி, குளம், கன்மாய்கள் தண்ணீர் இன்றி மேலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், தைலமரத்தை அகற்றக்கோரி நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்றத்தில் இனிமேல் புதிய தைலமரக்காடுகள் அமைக்கமாட்டோம் என்று வனத்துறை உறுதியளித்தது. அதே போலச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் டி.என்.பி.எல். ஒப்பந்தம் முடிய தைல மரக் காடுகள் அழிக்கப்பட்டு பல மரக்காடுகள் வளர்க்கப்படும் என்றார்.
இந்நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி அரிமளம் சுற்றுவட்டார கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் நடப்பட்டுள்ள தைல மரக்காடு நிலப்பரப்பிலிருந்து மழைத்தண்ணீர் வெளியே செல்லாமல் தடுக்கும் விதமாக வரப்புகள் அமைக்கப்படுவதைத் தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் தடுத்து நிறுத்தினார்கள். மேலும், இந்த பணி நடக்கக் கூடாது என்று வணிகர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கடையடைப்பு செய்து பிரமாண்ட பேரணி நடத்தி சாலையிலேயே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் இணைந்து போராட்டங்கள் நடத்துவோம் என்றனர்.