Published on 05/05/2020 | Edited on 05/05/2020
கரோனா எதிரொலி மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஏழை, எளிய மக்கள் மற்றும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கட்சி பொறுப்பாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
அதனடிப்படையில், ஆண்டிபட்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மகாராஜன் கடந்த ஒரு மாத காலமாக தனது தொகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட, சின்னமனூர் அருகே உள்ள மேகமலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
காலை ஆறு மணிக்கு ஆண்டிபட்டியில் இருந்து புறப்பட்ட எம்.எல்.ஏ மகாராஜன், மேகமலை, ஹைவேவிஸ் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று, காய்கறிகளை வழங்கினார். தொடர்ந்து, மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு, வெண்ணி யார் மகாராஜமெட்டு ஆகிய பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு காய்கறி பையினை வழங்கினார். மேகமலையில் உள்ள ஆயிரத்து 300 தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அந்த பையில் இருந்தன.
குறிப்பாக, முருங்கைக்காய், பீன்ஸ், பல்லாரி வெங்காயம், உருளைக்கிளங்கு, வாழைக்காய் போன்றவை. இவை மட்டுமல்லாமல், குடும்பத்திற்கு இரண்டு பாக்கெட் கோதுமை மாவும் கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருந்தனர் சமூக இடைவெளியை பின்பற்றி, அனைவரது வீடுகளுக்கும் சென்ற எம்.எல்.ஏ மகாராஜன் காய்கறிகளை வழங்கினார்.
இது சம்பந்தமாக மேகமலை மக்கள் கூறும் போது, அரிசி, பருப்பு எல்லாம் ரேசன் கடைகளில் கிடைக்கிறது. காய்கறிதான் கிடைக்கவே இல்லை. கடந்த மூன்று வாரங்களாக காய்கறிகள் இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தபோதுதான், எம்.எல்.ஏ மகாராஜன் வந்து காய்கறிகள் கட்சி பாகுபாடு இன்றி கொடுத்து உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.
இதில் கம்பம் ஒன்றிய பொறுப்பாளர் சூர்யா தங்கராஜ், தொமுச தலைவர் செல்லப்பா, தலைமை செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ, ஹைவேஸ் பேரூர் செயலாளர் மாவட்ட பிரதிநிதி பென்லி, மாவட்ட கவுன்சிலர் மறவபட்டி மகாராஜன், ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து, தமிழன், சிவா, மணி, பால்பாண்டி மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.