ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.
வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.
சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.