தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எல்லை தாண்டி பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 17 மீனவர்கள், நேற்று இரவு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 17 மீனவர்களையும் இலங்கை படை கைது செய்தது. அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் அதிபராக பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 16ஆம் தேதி அநுர குமார திஸ்நாயக இந்தியாவிற்கு வந்தார். அதனை தொடர்ந்து, அநுர குமார திஸநாயக பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அந்த பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் ஆகியவற்றை குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது செய்தியாளர்களைச சந்தித்துப் பேசிய அநுர குமரா திஸநாயக, “இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்று நான் இந்திய பிரதமரிடம் உறுதியளித்துள்ளேன். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.