முன்னாள் இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தவருமான ராஜிவ்காந்தி, 1991 மே மாதம் மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் என 4 பேருக்கு மரண தண்டையும், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் என 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கருணை அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஆயுள்தண்டனையாக குறைத்தது.
சுமார் 28 ஆண்டுகாலமாக சிறையில் இருப்பதால் தாங்கள் இரண்டு ஆயுள்தண்டனை காலத்தை கடந்துவிட்டோம், எங்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், சட்டப்போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இதனை பாஜக அரசும், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் கண்டுக்கொள்ளவில்லை.
இதற்கிடையில் சிறைக்கைதி முருகனின் தந்தை சில வாரங்களுக்கு கேன்சர் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிர் போராட்டத்தில் இருந்தபோது, தன் மகனுடன் வீடியோ காலில் பேச விரும்பினார். இதுதொடர்பாக முருகன் தரப்பில் சிறைத்துறை தரப்பில் அனுமதி கேட்டார் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் முறையிட்டுயிருந்தார். அந்த வழக்கு நடக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். இப்போதும் அதுகுறித்த வழக்கு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், தான் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டுமென முருகன் தரப்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முன்வைத்து கடந்த ஜீன் 2ந்தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். இந்த தகவலை 4 நாட்களுக்கு பின்பே சிறைத்துறை வெளியிட்டது. கடந்த 8 நாட்களாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென முருகனிடம், சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.