Skip to main content

ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

Rajendra Balaji appeals to Supreme Court

 

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

 

அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதேபோல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டு மனைகளும், 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார் என்றும், இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கும் அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும், விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும், இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும், அதனால் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும் கூறி, வழக்கை முடிக்கவும் பொதுத்துறை உத்தரவிட்டதாதாக கூறப்பட்டிருந்தது.

 

Rajendra Balaji appeals to Supreme Court

 

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  கூறுகையில்,  ஆரம்பக்கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை. அரசு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது வருமானம் உள்ளது என கூறினார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம். சத்தியநராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்துக்குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்குப் பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

 

இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கின் மூன்றாவது நீதிபதியாக  எம். நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான், இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், வழக்கு விசாரணை தள்ளிவைக்க  வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களைத் திரட்டிவருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை நடத்த தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதியான இன்றைக்கு தள்ளிவைத்திருந்தனர்.

 

இந்நிலையில், சொத்துகுவிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் இருவேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டதால் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.