
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்தவர் பிரபு(43). இவர் செவ்வாய்க்கிழமை(1.4.2025) இரவு திண்டிவனத்தில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் தூக்கம் வந்ததன் காரணமாக கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் அருகே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கியுள்ளார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று தூங்கிக்கொண்டிருந்த பிரபுவை மிரட்டி அடித்து உதைத்து அவரிடம் இருந்து ரூ. 3000 பணம் மற்றும் செல்போனை பிடுங்கிச் சென்றுள்ளது. அதேபோன்று அதே சாலையில் உள்ள பெரியபட்டு என்ற இடத்தில் சீர்காழியை சேர்ந்த மணிமாறன் என்பவர் திண்டிவனத்தில் இருந்து தான் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியை நிறுத்திவிட்டு அதிகாலை 3.30 மணிக்கு அசந்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மணிமாறனை பணம் கேட்டுத் தாக்கியுள்ளனர். ஆனால் கையில் பணம் இல்லை என்று மணிமாறன் கூறியதும், கத்தியால் அவரின் தலையில் வெட்டிவிட்டுயுள்ளனர். இதனால் வலியில் மணிமாறன் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நள்ளிரவில் லாரி ஓட்டுநர்களைத் தாக்கி வழிபறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.