
மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு மராத்தி தெரியவில்லை என்றால், கன்னத்தில் அறையுங்கள் என்றுநவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிரா மக்கள் மத்தியில் சில தினங்களுக்கு பேசியிருந்தார்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி மும்பையில் நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, “நமது மும்பையில், அவர்கள் மராத்தி பேசத் தெரியாது என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்களின் கன்னத்தில் அறை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும். நீங்கள் இங்கு வசித்து, அந்த மொழியைப் பேசவில்லை என்றால், நீங்கள் தகுந்த முறையில் நடத்தப்படுவீர்கள்.
நாளையில் இருந்து ஒவ்வொரு வங்கியையும், ஒவ்வொரு நிறுவனத்தையும் சரிபார்க்க வேண்டும். அங்கெல்லாம், மராத்தி மொழி பயன்படுத்தப்படுகிறதா? என்று சரிபார்க்க வேண்டும்.நீங்கள் அனைவரும், மராத்தி மொழிக்காக உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பாருங்கள், அங்கு இந்தி வேண்டாம் என்று மக்கள் துணிந்து சொல்கிறார்கள், கேரளாவில் கூட” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், மராத்தி பேச தெரியாது என்று சொன்னதால் மும்பையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவரை, ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மராத்தி மொழியில் பேசத் தெரியாது என்று சொன்னதால், பாதுகாவலர் ஒருவரை, நவநிர்மாண் சேனா கட்சியினர் சுற்றி நின்று கொண்டு கன்னத்தில் அறைந்து தாக்குகின்றனர். அவர்களை, ஒரு நபர் தலையிட்டு தடுக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.