
சிவகங்கை மாவட்டம் உலகம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி ரஞ்சிதா. இந்த தம்பதியினருக்கு ராஜிவ் (9), பூஞ்சோலை ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். ராஜிவ் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 ம் வகுப்பு படித்துவந்தார்.
இந்த நிலையில் நேற்று(1.4.2025) செவ்வாய்க் கிழமை மாலை ரஞ்சித, தனது தாய் வீடான பொன்னமராவதி அருகில் உள்ள மயிலாப்பூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் தன் மகன் மற்றும் மகளுடன் சென்றுவிட்டுத் திரும்பும் போது, பொன்னமரவதி வாரச்சந்தையில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இருள்சூழும் நேரத்தில் தனது குழந்தைகளுடன் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கேசராப்பட்டி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்றி மோட்டார் சைக்கிள் எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்த ரஞ்சிதா மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஒரு கையில் மகளை இறக்கிவிட்டுக் கொண்டிக்கும் போதே தீ வேகமாக பரவியதால் மோட்டார் சைக்கிளை பிடிக்க முடியாமல் கீழே விட்டுவிட மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் அருகே கீழே அமர்ந்திருந்த சிறுவன் ராஜிவின் கால் மோட்டார் சைக்களுக்குள் மாட்டிக் கொண்டது. இதனால் ராஜிவால் வெளியே வரமுடியாததால் அவரின் உடல் முழுவதும் தீ வேகமாக பரவியது.
ரஞ்சிதாவைன் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ராஜிவை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைகாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு தாயின் கண் முன்னே மகன் தீயில் எரிந்து படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.