![Rain in Tamil Nadu for 5 days!!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z3snVmilSdD2HAWwZ3LpquxTZvggn-JaC0rF6dCcMic/1683729382/sites/default/files/inline-images/1_451.jpg)
நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமென வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட - வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அதன் பிறகு வடக்கு - வட கிழக்கு திசையில் திரும்பி, 13 ஆம் தேதி சற்று வலுக் குறைந்து 14 ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதன் காரணமாக இன்று முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.