தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் 2 காவல்நிலைய அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதில் தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருக்கும் ரௌலிபிரியாவின் தனிப்படை சமீபத்தில் பிடித்த குட்கா மூட்டைகளை தஞ்சை டவுன் ஸ்டேசன் அதிகாரியும், மற்றொரு காவலரும் அந்த மூட்டைகளை வெளியே விற்பனை செய்துவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து முடிந்து அடங்குவதற்குள் அடுத்ததாக பட்டுக்கோட்டை காவல்நிலைய அதிகாரியாக இருப்பவர் மீது தொடர்ந்து பல புகார்கள் எழுந்துள்ளன. அதிலும், அந்த அதிகாரி அமர்ந்திருக்கும் அறை கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளே நடப்பது வெளியே தெரியாமலும், வெளியே நடப்பதை உள்ளிருந்தே கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது அறையில் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், ஏசி பொறுத்தப்பட்டு எப்போதும் தாழிட்ட அறைக்குள் தான் எல்லா டீலிங்கும் நடக்கும். இது காவல்நிலையம் அல்ல கெஸ்ட் அவுஸ் என்று பலர் புலம்புகின்றனர்.
கடந்த முறை இவர் பணியாற்றிய காவல்நிலையத்தில், இவருக்கு கிப்டாக இன்னோவா கார் வாங்கி கொடுக்கப்பட்டது. அதனால் எழுந்த சர்ச்சையில் தான் அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார். ஆனால் அவருக்கு அதிக அளவில் பணம் கொட்டியது அவர் ஏற்கனவே பணியாற்றிய காவல்நிலையம்தான் என்றும், அதனால் மீண்டும் அங்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
தற்போது பட்டுக்கோட்டையில் இருக்கும் அவர் 2 லாரிக்கு சொந்தகாரராக மாறியிருக்கிறார். இவ்வளவு துணிச்சலாக ஒரு காரியத்தை அவர் செய்கிறார் என்றால் பின்புலம் இல்லாமலா என்ற கேள்வி எழும்பும். அதுகுறித்து விசாரித்தபோது, அவர், திருச்சி மாவட்ட காவல்துறையில் முன்னாள் உயர் அதிகாரியாக இருந்தவரின் உறவினர் என்றும், அதனால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் காலரை தூக்கிவிட்டு வலம்வந்திருக்கிறார்.
தற்போது அந்த உயர் அதிகாரி இடமாறுதலில் மாறியதால், மாவட்ட கண்ட்ரோல் முழுவதும் எஸ்.பி கையில் உள்ளது. இந்நிலையில், எஸ்.பி ரௌலிபிரியா அந்த காவல் நிலைய அதிகாரியை அவ்வப்போது கடிந்து கொள்வாராம். அதற்கு காரணம் இந்த அதிகாரி, முன்னாள் உயர் அதிகாரி தனது உறவினர் என்பதால், அவர் இந்த மாவட்ட பொறுப்பில் இருந்தபோது, இவர் தனது மேல் அதிகாரிகளிடம் எந்த விவரத்தையும் கொண்டு செல்லாமல் நேரடியாக அந்த உயர் அதிகாரியிடம் கொண்டு சென்று பல உள்ளடி வேலைகளை செய்துவந்துள்ளார்.
இவருடைய நடவடிக்கையால் அந்த காவல்நிலையத்தில் இருந்த 12க்கும் மேற்பட்ட காவலா்கள் தங்களுக்கு இந்த காவல்நிலையம் சரிபட்டு வராது என்று கூறி எஸ்.பியிடம் மனு அளித்து தங்களை வேறு காவல்நிலையத்திற்கு மாற்றுங்கள் என்று மாறி சென்றுள்ளனர். அவருக்கு வளைந்து கொடுத்து செல்லும் காவலர்கள் மட்டுமே தற்போது பணியாற்றி வருவதாக கூறுகின்றனர். இத்தனை பிரச்சனைக்கு உரிய அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.