ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, அரக்கோணம் வழியாக கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக, போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பிப்ரவரி 9ந்தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, சென்னைக்கு நள்ளிரவில் வந்த ரயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் நோக்கி பிப்ரவரி 10ந்தேதி இரவு வந்து கொண்டிருந்தது. கஞ்சா கடத்தல் குறித்து ஏற்கனவே தகவல் கிடைத்ததால் அந்த ரயிலில் ஏறிய அரக்கோணம் ரயில்வே போலீஸாருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஒருப்பெட்டியில் 3 பெரிய பைகளில் 16 கிலோ அளவிற்கு கஞ்சா போதை பொருள் இருப்பது தெரியவந்தது. அந்த பெட்டியில் இருந்தவர்களிடம் இந்த பேக் யாருடையது எனக்கேட்க யாரும் முன்வரவில்லை. பயணம் செய்த சிலர் இவர்கள் தான் வைத்தார்கள் என மூன்று பேரை அடையாளம் காட்டினர். அவர்களிடம் விசாரித்தனர், 3 பேரில் ஒருவரிடம் போலீஸ் அடையாள அட்டை இருந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் அடையாள அட்டை வைத்திருந்தவர் போலீஸ்காரர் என்று கூறப்படுகிறது. இதனிடையே ரயில்வே போலீசார் அரக்கோணத்தில் அந்த ரயிலில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதிப்பு ரூபாய் 10 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து பறிமுதலான கஞ்சாவுடன் கைதான 3 பேரும் காஞ்சிபுரம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம், எங்கிருந்து கஞ்சாவை வாங்கி, தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்தும், இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.