நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று முன்தினம் (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் உள்ள நீலகிரி, ஈரோடு, விழுப்புரம், மதுரை மற்றும் தென்காசி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கும் எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் பழுது அடைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது அடைந்தன. மொத்தம் 210 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் கசிவு ஏற்பட்டதால் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகின. இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயவர்தனும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும், நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்ச்செல்வியும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.