![Ragulji is coming to Tamil Nadu ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/y1S6eFXUtYEQgk-NYBkpzob0eSP4ws7i1nyLcZf6tso/1611291919/sites/default/files/inline-images/ragul-gandhi-600x400.jpg)
தி.மு.க.வில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுக்க தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தை அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மூலம் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் ராகுல் காந்தியின் தேர்தல் பயணம் வருகிற 23ம் தேதி முதல் கொங்கு மண்டலத்திலிருந்து தொடங்குகிறது. 23ம் தேதி கோவை வரும் அவர், அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, 24ம் தேதி காலை 10.00 மணிக்கு திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிறகு அங்கு இருந்து புறப்படும் ராகுல்காந்தி, காலை 10.30 மணிக்கு ஊத்துக்குளியிலும், 11.15 மணிக்கு பெருந்துறையிலும் மக்கள் மத்தியில் பேசுகிறார்.
மதியம் 12.00 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மக்களிடம் பேசுகிறார். பிறகு மதியம் 1.15 மணிக்கு அரசலூர் அருகே உள்ள ஓடாநிலையில் சுதந்திர போராட்ட தியாகியாக போற்றப்படும் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு நெசவாளர்கள் மத்தியில் பேசுகிறார்.
பிறகு மதியம் 3.45 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பேசுகிறார். அடுத்து மாலை 4.45 மணிக்கு தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இப்படி இருநாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். ராகுல் காந்தியின் கொங்கு மண்டல பயணம் தி.மு.க. கூட்டனிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.