2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 19, 20, 21 சுற்றுகள் மற்றும் 203 தபால் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு உயர் நீதிமன்றத்திலேயே மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டில் எந்தவிதமான உத்தரவை பிறப்பித்தாலும் உயர்நீதிமன்றம் அதை பின்பற்றும் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். அதனையடுத்து ராதாபுரம் சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குகளும் மற்றும் ராமையன்பட்டி அரசு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தனி வாகனத்தின் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், நீதிமன்றத்தில் இன்று வாக்கு இயந்திரங்கள் தாக்கல் செய்யுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை செய்ய 24 அலுவலர்கள் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மறுவாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் யார் என்ற பட்டியலை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் வெளியிட்டுள்ளார்.
அதிமுக எம்எல்ஏ வின் மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு தடைவிதிக்க முடியாது என கூறி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நிலையில், இருப்பினும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திரன் பட் அமர்வு இன்பதுரையின் மேல் முறையீட்டை இன்று விசாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மொத்தம் 4 பெட்டிகளில் தபால் வாக்குகள், 19, 20, 21 சுற்றுகளில் வாக்கு பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் தற்போது சென்னை உயர்நீதிமன்றதிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு மூன்று சுற்றுகளாக இந்த வாக்குகள் எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.