விழுப்புரம் மாவட்டம், கே.கே ரோடு மணி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் 18 வயது மகள், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஃபார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்று, முதல் மாடியில் உள்ள தனது வகுப்பறைக்குச் சென்றுள்ளார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அதே தளத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும், மாணவி வகுப்பறைக்கு வராததால் சக மாணவர்கள் அவரை தேடி உள்ளனர். அப்போது மாணவி, கழிவறைக்கு நேர் கீழே மாடியிலிருந்து கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடியிலிருந்து குதித்த மாணவிக்கு மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகும், அதன் மூலம் உடலிலிருந்து ரத்தம் வெளியேறி சுய நினைவின்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அபிஷேக் மற்றும் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், மாணவி எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.