Skip to main content

"எதற்கும் துணிந்தவன் சூர்யா" - ஆதரவு தெரிவித்து வீடியோவை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்! 

Published on 16/11/2021 | Edited on 17/11/2021

 

"Surya is brave for anything" - Actor Sathyaraj who released the video in support!

 

நடிகர் சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்கும், சூர்யாவிற்கும் சில அமைப்புகளிலிருந்து எதிர்ப்பு வரும் நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் சத்யராஜ். அதில்,

 

"நமது பெருமை மிகு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு, அந்தப் படத்திற்கு (‘ஜெய் பீம்’), மிகப்பெரிய ஜாம்பவான்கள், கலைவித்தகர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவிட்டார்கள். அதைத் தாண்டி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் சில படங்கள் கை தட்டுவதற்கும், விசில் அடிப்பதற்கும், ரசிப்பதற்குமான படமாக இருக்கும். சில படங்கள் பாராட்டுதலுக்குரிய படமாக இருக்கும். மிகச் சில படங்களே போற்றுதலுக்குரிய படங்களாக இருக்கும். அதில் முக்கியமான இடத்தை 'ஜெய் பீம்' படம் பெற்றுள்ளது. 

 

அதில் எதற்கும் துணிந்தவன் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். டைரக்டர் ஞானவேல் உள்ளிட்ட அத்தனை 'ஜெய் பீம்' திரைக்கலைஞர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். நிறைய பேர் பாராட்டிவிட்டார்கள். இப்போது என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும் சில பேருக்குத் தெரிவிப்பதற்காக இந்தப் பதிவு. சூர்யா உள்ளிட்ட, குறிப்பாக சூர்யாவுக்கு வந்த பிரச்சனைகளுக்கு ஆதரவாக கலை உலகத்தைச் சார்ந்தவர்கள் குரல் கொடுக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபையிலிருந்து எங்கள் இயக்குநர், இயக்குநர் இமயம் பாரதிராஜா குரல் கொடுத்திருக்கிறார். நான், என் நண்பன் மணிவண்ணன் எல்லாம் பாரதிராஜா சாரை எங்க டைரக்டர் என்றுதான் சொல்வோம். 

 

அவர் குரல் கொடுத்திருப்பது ரொம்ப சிறப்பாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருக்கிறது. பாரதிராஜா சார் கொடுத்த அறிக்கையைத் தாண்டி ஒரு விஷயத்தைச் சொல்லிவிட முடியாது. அதற்கு பாரதிராஜா சாருக்கு நான் நன்றியோ, பாராட்டோ சொன்னால் நிச்சயமாகக் கோபித்துக்கொள்வார். ஃபோன் பண்ணி என்ன இதுக்கெல்லாமா பாராட்டு என்பார். இருந்தாலும் மனம் கேட்காமல்தான் இந்தப் பதிவைப் போடுகிறேன்.

 

பாரதிராஜா மிக அற்புதமாகச் சொல்லியிருக்கார். திரைக்கலைஞர்களுக்கு வேறு சில காரணங்களுக்காக ஒரு படத்திற்குப் பிரச்சனை வந்தால், அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும்போது, சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கும்போது, பிரச்சனைகள் வரும்போது, கலை உலகத்தைச் சார்ந்தவர்கள் எல்லோரும் முன்நிற்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜா அவர்கள் முன்மொழிந்ததை, நான் அப்படியே வழிமொழிகிறேன். நன்றி! வணக்கம்" என்று கூறி நடிகர் சூர்யாவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் சத்யராஜ். 

 

 

சார்ந்த செய்திகள்