ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டுச் சாவடிக்கு செல்லும் முன்பு ஒரு மரக்கன்று நட்டுவிட்டு செல்லுங்கள். 5 ஆண்டுகளில் நீங்கள் ஓட்டுப்போட்ட வேட்பாளர் பலன் கொடுக்கவில்லை என்றாலும் நீங்க நட்ட மரம் பலன் கொடுக்கும் என்று சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மரக்கன்று நட அழைப்பு கொடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மரக்கன்று நடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை இளைஞர்கள் பதிவிட்டும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அதாவது ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டுப் பதிவு செய்யும் முன்பு தங்கள் வீட்டிலோ அல்லது சாலை ஓரங்களிலோ ஒரு மரக்கன்று அல்லது செடியை நட்டு வைத்துவிட்டு ஓட்டுப் போடுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் அந்த கன்றை வளருங்கள். இறுதியில் நீங்கள் ஓட்டுப் போட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் உங்களுக்கு பலன் கொடுக்கவில்லை என்றாலும் நீங்க நட்டு வளர்த்த மரம் நிச்சயம் பலன் கொடுக்கும். அதனால் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு மரக்கன்றை நட்டுவிட்டு வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களியுங்கள் என்று அந்த பதிவுகள் செல்கிறது.
இது குறித்து சமூகவலைதளங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருபவர்களில் ஒருவரான யாதும் ஊரே யாவரும் கேளீர் அமைப்பை சேர்ந்த எடிசன் கூறும் போது.. நாட்டில் காடுகள், மரங்களின் பரப்பளவு குறைந்து கொண்டே வருவதால் வெப்பம் அதிகமாகவும், மழை குறைவாகவும் உள்ளது. அதனால் சராசரியாக பெய்ய வேண்டிய பருவமழை கூட நமக்கு கிடைக்கவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. விவசாயம் பொய்த்துப் போனது. இந்த நிலையில் மரங்கள் அதிகமாக உள்ள பகுதியில் கஜா புயல் தாக்கி ஒட்டு மொத்த மரங்களையும் அழித்துவிட்டு சென்றது.
அதனால் மீண்டும் மழை பெறவும் விவசாயம் செழிக்கவும் மரங்கள் அவசியம். அதனால் தான் மரக்கன்றுகளை நடவேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது தேர்தல் நடக்க உள்ளது. இந்திய முழுவதும் நடக்கும் தேர்தல். இந்த தேர்தலில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு மரக்கன்றை நட்டு வளர்த்தாலே ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் மரங்களை வளர்த்துவிடமுடியும். அதனால் தான் சமூகவலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளோம். இதில் இளைஞர்கள் ஆர்வத்தொடு அந்த தேர்தல் நாளுக்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் போடும் ஓட்டு எங்களுக்கு பலன் கொடுக்கவில்லை என்றாலும் நாங்கள் நடும் செடியும், மரமும் நிச்சயம் பலன் கொடுக்கும் என்றார்.