புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி வாக்கு சேகரிக்கச் சென்ற போது சில வருடங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சகோதரர்களை மீண்டும் சேர்க்கக் கோரி ரகுபதி காரை வழிமறித்த சிலர், வாக்குவாதம் செய்து கார் கண்ணாடிகளையும் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்த முல்லிப்பட்டி மருங்கூர் சரவணன் மற்றும் அவரது சகோதரர்கள் திருமயம் கோட்டை கோயில் வாசலில் தேங்காய்க் கடை வைத்திருந்த பெண்களை தகாத வார்த்தைகளில் பேசி கடையைக் சூறையாடியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அப்போது கட்சியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர். அதன் பிறகு சரவணன் மட்டும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரர்களான குமரேசன், சிவராமன் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்படவில்லை. இதனால் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதுக்கோட்டை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளருமான ரகுபதி தான் காரணம் என்று அவர் மீது கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (27/03/2021) இரவு தி.மு.க. வேட்பாளரான ரகுபதி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முல்லிப்பட்டி மருங்கூர் பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற போது, சாலையில் கட்டைகளை போட்டு மேலும் செல்லமுடியாமல் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். அப்போது அவருடன் வந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் தடைகளை அகற்றிவிட்டு, அங்கிருந்து செல்ல முயன்றனர். அப்போது ரகுபதியுடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிவராமன் மற்றும் குமரேசன் ஆகியோருடன் சிலர் வாக்குவாதம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து கற்கள் வீசி தாக்கியதில் வேட்பாளர் ரகுபதி மற்றும் பின்னால் வந்த கார்களின் கண்ணாடி உடைந்தது. அதனால் அந்த இடத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருமயம் காவல்துறையினர் கார் கண்ணாடிகளை உடைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.