Skip to main content

5 ஆயிரம் தென்னம் பாளைகள்; அலங்கரித்து குடங்களில் தூக்கி வந்த பெண்கள்..

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

pudukkottai amman temple festival

 

தமிழ்நாடு முழுவதும் ஆடி மாதம் ஒவ்வொரு கிராமத்திலும் குல தெய்வ வழிபாடு, கிராம காவல் தெய்வ வழிபாடுகள் ஆட்டம் பாட்டத்துடன் கிராமிய மனத்தோடு நடந்து வருகிறது. அய்யனார், முனி, கருப்பர் போன்ற எல்லை காவல் தெய்வங்களுக்கு குதிரை எடுப்பு, கிடாவெட்டு பூஜையும், பூஜை சோறு படையல் வைத்து உறவுகளை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  கோயில்களுக்கு முளைப்பாரி, மது எடுப்பு திருவிழாக்களும் கோலாகலமாக நடந்து வருகிறது. இதே போல கோலாகலமாக திருவிழா நடக்கும் ஒரு கிராமம்தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம். மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகையும் பரந்து விரிந்த பரப்பளவும் கொண்ட பெரிய கிராமம். கிராமத்தின் மையத்தில் உள்ள பெரிய குளத்தில் குளிர்ச்சியில் உள்ளது கிராமக் காவல் தெய்வங்களில் ஒன்று பிடாரியம்மன். கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் ஒரு நாள் கோயில் முளைப்பாரிக்கு விதை கொடுக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி, வீட்டுக்கு வீடு முளைப்பாரி வைத்து, பெண்கள் கும்மியடித்து வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை, தப்பட்டை வாணவேடிக்கைகளுடன் மண்ணடித்திடல் சென்று, ஊரே ஒன்று சேர்ந்து பிடாரியம்மன் கோயிலைச் சுற்றி வந்து, குளத்து தண்ணீரில் விட்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

 

pudukkottai amman temple festival

 

அதே போல புதன் கிழமை ஊரே விழாக் கோலம் பூண்டு வீட்டுக்கு வீடு வாசலில் குடம் வைத்து நெல் நிரப்பி அதில் தென்னம் பாளைகளை உடைத்து வைத்து மலர்களால் அலங்கரித்து குல தெய்வக் கோயில்களில் ஒன்று கூடிக் கும்மியடித்து, ஒவ்வொரு குடியிருப்பும் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து, மண்ணடித்திடலில் ஊரே ஒன்று சேர்ந்து கோயில் நோக்கிச் செல்லும் போது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சுமார் 5 ஆயிரம் தென்னம்பாளைகளும் பெண்களின் தலையில் உள்ள குடங்களில் நின்று அசைந்து ஆட, பக்தி பரவசத்தில் பெண்கள் சாமியாட, சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அக்கம் பக்கம் கிராமத்தினரும் கூடி நின்றனர்.

 

pudukkottai amman temple festival

 

மண்ணடித் திடல் வரை அமைதியாக வந்த பெண்கள், அதன் பிறகு தென்னம் பாளைகள் விரியும் அளவுக்கு ஆட்டம் பாட்டத்துடன் தூக்கிச் சென்று, கோயிலைச் சுற்றி வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர். பாளை எடுப்புக்கு வெளியூர்ல உள்ளவங்க கூட தவறாம வந்துடுவாங்க. குறைஞ்சது 5 ஆயிரம் பாளை வரும். அதைப் பார்க்க 10 ஆயிரம் பேருக்கு மேல வருவாங்க என்கின்றனர் கிராம மக்கள். இதேபோல கீழாத்தூர் நாடியம்மன் கோயில் மது எடுப்பும் சிறப்பாகவே நடந்து முடிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்