பட்டியலின பிரிவினரை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக்கோரி, அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று, நாங்குநேரி தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வருகின்றன. முன்பு இந்த விவகாரம், அந்த சமுதாய கட்சித்தலைவர்களான புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், இவர்கள் மட்டத்தில் இருந்த, இந்த பிரச்சனை, தற்போது நாங்குநேரி தொகுதியில் உள்ள அந்த சமூக மக்களின் பிரச்சனையாக மாறியுள்ளது.
தற்போதைய நாங்குநேரி இடைத்தேர்தலின் காரணமாக மூலக்கரைப்பட்டி, அரியகுளம், உன்னங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள அந்த சமூக மக்கள் கருப்பு கொடியை ஏற்றி, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் மூலக்கரைப்பட்டி அருகே வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடமும் வழிமறித்து மக்கள் வாக்குவாதம் செய்துள்ளன.
இது போன்ற சம்பவங்கள் காரணமாகவும் மற்றும் அனுமதியின்றி கறுப்புக்கொடி ஏற்றியதற்காகவும் மூலக்கரைப்பட்டி அதிமுக நகர செயலாளர் அசோக் குமார் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சப் இன்ஸ்பெக்டர் துரை, புதிய தமிழகம் ஒன்றிய செயலகரான தளவாய் பாண்டி , அரியக்குளத்தின் சின்னத்துரை, அதே பகுதியையோ சேர்ந்த கொம்பையா மற்றும் ஜெகன், கல்லத்தி கிராமத்தில் சுடலை முத்து உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாங்குநேரி காவல்நிலையத்திற்குட்பட்ட உன்னங்குளத்தில் அனுமதியின்றி கறுப்புக்கொடி ஏற்றியதற்காக, தேர்தல் கண்காணிப்பு குழு தாசில்தார் செல்வகுமாரின் புகாரின் படி உன்னங்குலம் ஊர் பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற கறுப்புக்கொடி போராட்டம் சங்கரன்கோவில் வரை பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.