
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியாநல்லூர், வேளங்கிபட்டு, வில்லியநல்லூர், கொத்தட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் 7-க்கும் மேற்பட்ட சவுடு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரிகளில் அரசு அனுமதித்த 3 அடி ஆழத்தை விட 20 அடி வரை விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விலை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மார்ச் 6-ந் தேதி அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இப்பகுதியில் விதிகளை மீறி செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என உயர் மின் கோபுரத்தில் ஏறி பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து குவாரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் இரவு பகல் பாராமல் அத்தியாநல்லூர் கிராமத்தில் உள்ள குவாரியில் மணல் அள்ளப்படுவதால் அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) அப்பகுதியில் ஒன்று சேர்ந்து மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு புதுச்சத்திரம் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கூறுகையில், “அத்தியாநல்லூர் கிராமத்திற்கு உட்பட்ட சர்வே எண் 122 இல் பஞ்சமி நிலம் 9 ஏக்கர் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தை பாக்கியராஜ் என்பவர் அபகரித்து மணல் குவாரி நடத்தி இப்பகுதியில் உள்ள வாழ்வாதாரத்தை அழித்து வருகிறார். இதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடந்தையாக உள்ளனர். பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் இவர்கள் ஒரு இடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு அதற்கு சுற்று வட்டார பகுதிகளில் 20 அடி ஆழத்திற்கு அனுமதி இல்லாமல் மணல்களை அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு விளை நிலங்களும் அழிந்து வருகிறது.
எனவே உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மணல் குவாரியில் பொதுமக்கள் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் சரியான நடவடிக்கை இல்லை என்றால் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் அனைவரும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.