Skip to main content

சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்க கரும்பு விவசாயிகள் எதிர்ப்பு!!! சேலத்தில் இருதரப்புக்கும் காரசார வாக்குவாதம்!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
pongal


 

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெல்லம் உற்பத்தியாளர்கள் உள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, உற்பத்தியாளர்கள் சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகே வெல்ல மண்டியில் நடைபெறும் ஏலத்திற்குக் கொண்டு வருவது வழக்கம். 
 

இந்நிலையில் இன்று (டிசம்பர் 17) காலை வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய கரும்பு விவசாயிகள் சிலர், கடந்த சில நாள்களுக்கு முன்பு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட பல டன் கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர். வெல்லம் உற்பத்தியாளர்களின் இதுபோன்ற செயலால் கரும்பு விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை,'' என்றனர்.
 

பலர் முன்னிலையில் கரும்பு விவசாயிகள் பொத்தாம் பொதுவாக இவ்வாறு அதிருப்தியை வெளிப்படுத்தியதால், வெல்லம் உற்பத்தியாளர்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமடைவது குறித்து சிலர் அளித்த தகவலின்பேரில் அன்னதானப்பட்டி போலீசார் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டனர். 
 

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், ''சேலம் மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 100 டன்னுக்கு மேல் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
 

கடந்த மூன்று ஆண்டுகளாக மட்ட ரகமான சர்க்கரையை கலந்து வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இதனால் 2500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு டன் கரும்பு, இப்போது 1500 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. இதனால் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, சர்க்கரை கலந்து வெல்லம் உற்பத்தி செய்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும்,'' என்றனர்.
 

வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''சர்க்கரை கலக்காமல் வெல்லம் உற்பத்தி செய்வது தொடர்பாக உற்பத்தியாளர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனை கொஞ்சம் கொஞ்சமாக முறைப்படுத்தி, வரும் காலங்களில் சர்க்கரை கலக்காமல் வெல்லம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
 

இது ஒருபுறம் இருக்க, வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தனது பேஸ்புக் பக்கம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில், 'எதற்கு கரும்பு விவசாயம் செய்கிறீர்கள்? சாகுங்கள்,' என பதிவிட்டு இருந்தார். இதற்கு கரும்பு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்