திருப்பூர் மாவட்டம் அவினாசி - கோவை மெயின் ரோட்டுக்கு அருகில் அமைந்துள்ளது தெக்கலூர் கிராமம். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்த சுற்றுவட்டாரப் பகுதியிலிருக்கும் தொழிலாளர்களும், கல்லூரி மாணவ மாணவிகளும், தினமும் பேருந்தில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பூரிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்து திருப்பூருக்கும், கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன.
அதில் ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் கருமத்தம்பட்டி, தெக்கலூர் பயணிகளை புறக்கணிப்பதாக ஏராளமான புகார்கள் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இத்தகைய பேருந்துகள் ஊருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையிலேயே சென்று விடுகின்றன. அதையும் மீறி பயணிகள் பேருந்தில் ஏறி டிக்கெட் கேட்டால் அங்கெல்லாம் பஸ் நிற்காது எனக்கூறி அவர்களை கடும் சொற்களால் திட்டுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் செல்வி என்கிற பெண்மணி, தெக்கலூருக்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏற முற்பட்டபோது அவரை பேருந்தில் ஏறக்கூடாது எனக்கூறி கீழே இறக்கி விட்டுள்ளனர்.
அந்த சமயம், இதை கவனிக்காத பேருந்து ஓட்டுநர், வாகனத்தை விரைந்து இயக்கியதால், அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இந்நிலையில், திருப்பூரில் பணியாற்றி வரும் ஈஸ்வரன் என்ற முதியவர், தெக்கலூர் செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, அந்த முதியவரை பேருந்தில் இருந்து இறங்கச் சொன்ன நடத்துனர், அவரை கடுமையான சொற்களால் திட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து, அவர் அந்த பேருந்தை விட்டு இறங்க மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர், வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளார். அதன்பிறகு, அந்த வீடியோ வைரலானதை அடுத்து, குறிப்பிட்ட அந்த தனியார் பேருந்தை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு திருப்பூர் எஸ்.பி. சஷாங் சாய் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அந்த பேச்சுவார்த்தையில் முதியவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர் மீதும், அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தெக்கலூர் பகுதியில் காலையிலும் மாலையிலும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.