பிரதமர் மோடி தொடர்ந்து ஜனநாயகப் படுகொலை செய்கிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,
செய்தியாளர்: கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சியை கவர்னர் அமைத்திருப்பது சரியான நடைமுறையா?
ஸ்டாலின்: பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பயன்படுத்தி, எந்தளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாடறிந்த உண்மை. அதேநிலையை, இப்போது கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அரங்கேற்றி இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பிரதமராக இருக்கும் மோடி இப்படி தொடர்ந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
செய்தியாளர்: திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?
ஸ்டாலின்: திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, திமுக உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.
செய்தியாளர்: தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கவர்னர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார்களே?
ஸ்டாலின்: அது ஊரறிந்த உண்மை. ஏற்கனவே இதை தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்போது கர்நாடக மாநிலம் பார்க்கிறது. அதேபோல, பல்வேறு மாநிலங்களும் இதனை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.