சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான சங்கர் சுப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்காடி வருகிறார். இவரின் மகன் சதீஷ் குமார், கடந்த 2011 ஜூன் 7ஆம் தேதி காணாமல் போனார். அதைத் தொடர்ந்து தன் மகன் சதீஷ் காணவில்லை என்று சங்கர் சுப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் சில நாட்கள் கழித்து சதீஷின் உடல் சென்னை ஐ.சி.எஃப் காலனி அருகே உள்ள குளத்தில் பிணமாக மிதக்கிறது எனத் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொடுத்த தகவலின்படி சதீஷின் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, சதீஷ், தற்கொலை செய்துகொண்டார் எனும் கோணத்தில் வழக்கை கொண்டுபோனது. ஆனால், சங்கர் சுப்பு, சதீஷ் மரணத்தில் மர்மம் உள்ளது. இது திட்டமிட்ட கொலை, இந்த வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரிகளுக்கும் சதீஷ் கொலையாளிகளுக்கும் தொடர்புள்ளது. அதனால் இந்த மரணத்தை தற்கொலை என சித்தரிக்கிறார்கள் இது கொலைதான் என்று தெரிவித்தார். மேலும், கொலைக்குப் பின்னணியில் காவல்துறை அதிகாரிகள் சிலரே சம்பந்தப்பட்டிருப்பதால் நேர்மையாக விசாரணை நடக்காது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார். அதன்படி இந்த கொலையின் பின்னணியைக் கண்டறிய சிபிஐ சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அதில் முன்னாள் சிபிஐ அதிகாரி ராவணன், முன்னாள் மும்பை போலீஸ் கமீஷ்னர் சிவானந்தம் உட்பட 18 பேர் இடம்பெற்றனர். பின்னர், விசாரணை முடித்து நீதிமன்றத்தில் சிறப்புக் குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, பி.எம்.பிரகாஷ் அளித்த தீர்ப்பில், “சங்கர்சுப்பு மகன் சதீஷின் மரணம் கொலைதான்” என்று தீர்ப்பளித்துள்ளார்.