Skip to main content

அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம்; முதல்வர் முக்கிய முடிவு  

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Price hike of essential commodities cm mk stalin is the key decision

 

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த இரு வார காலமாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. தற்போது தக்காளி வெளிச்சந்தைகளில் 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

 

இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், அரசு தரப்பில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அரசு சார்பில் தக்காளியை கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணை பசுமை கடைகள் மூலம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கிய தமிழக அரசு, முதல் கட்டமாக வட சென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25  கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் என மொத்தம் 82 கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்து வருகிறது.

 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று தக்காளி கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தக்காளி கிலோ 110 முதல் 130 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய ரக தக்காளி 10 ரூபாய் உயர்ந்து இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும், பருப்பு வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்திற்கான காரணம், விலை உயர்வைத் தடுப்பது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெகநாதன், வேளாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “காய்கறிகளின் இந்த விலை உயர்வுக்கான பலன் விவசாயிகளுக்கு நேரடியாக செல்லவில்லை என கேள்விப்படுகிறேன். இதனை சரி செய்ய உழவர் சந்தைகள் பெரிதும் உதவிடும். எனவே இதில் வேளாண்மைத்துறை தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கோவிட் தொற்று காலங்களில் செயல்படுத்தப்பட்டது போன்று நடமாடும் காய்கறி கடைகளை தற்போது மாநகராட்சி மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் தொடங்கலாம்” என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்