Skip to main content

“எழுதாத பேனாவிற்கு எதுக்கு நினைவுச் சின்னம்?” - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

Premalatha Vijayakanth spoke about the pen statue

 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆனந்த் நன்கு அறிமுகமானவர். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரை பார்க்கும் போது விஜயகாந்த்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம், எனவே தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம். இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

 

எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது. எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார். மக்களது வரிப் பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?” என்றார்.

 

இதனைத் தொடர்ந்து விஜயகாந்த்  உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற  கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, “இது குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும். விஜயகாந்த் உரிய நேரத்தில் அதனை அறிவிப்பார்” என்றார். மேலும், தேமுதிக கொள்கையுடன்  ஒத்துப் போகும் கட்சிகள் தமிழகத்தில் பல உள்ளது. ஆகையால் தான் 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரிட்டதாகத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி அண்ணன் எப்பவும் அழகா சிரிப்பாரு” - விஜயபிரபாகரன் ஐஸ் மழை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Edappadi Annan will always have a beautiful smile Vijaya Prabhakaran Ice rain

சிவகாசியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் விருதுநகர் பாரளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (28.03.2024) நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றியனார். இந்தக் கூட்டத்தில், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் பேசுகையில், “இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம். எங்க அப்பா கேப்டன் விஜயகாந்த் விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒரு நாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம்.. எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுப்போச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு.

அப்போ இது யாரோட ஆசை,  கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு. ஆண்டவர் சொல்லிருக்காரு போல. நிறைய பேர் சொன்னாங்க. விஜயபிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு?. பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு. ராமானுஜபுரத்துலதான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி, பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்கதான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப்  பெருமையா நினைக்கிறேன்.

விஜயகாந்த் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றுருக்காருன்னு. என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படனும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது, அ.தி.மு.க. எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல. ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான், கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதேமாதிரி அ.தி.மு.க.வுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க.

எனக்கு உள்ள வரும் போது தே.மு.தி.க., அ.தி.மு.க. எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதுனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன். இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள்தான் ஜாஸ்தி. இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018இல் விஜயகாந்த் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல, அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளாரா உங்க முன்னாடி பேசும் போது, ரொம்ப சந்தோஷம் அடையறேன்.

இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்ன்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை, தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு. அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதுனால அந்த வார்த்தை தெரியும், சிவகாசிதான் சின்ன ஜப்பான்ன்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா. அவ்ளோ திறமைசாலிகள், வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க. இன்னைக்கு சைனா  ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு, நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு, உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வுகாண முடியும். அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணியின் முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் விஜயகாந்த் மகனா, எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்” எனப் பேசி சைகைகளால் முரசு கொட்டினார் விஜயபிரபாகரன். 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.