புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி உருவான காலத்தில் இருந்தே தொடர்ந்து மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என ஏராளமானவர்கள் இன்று பணியில் உள்ளனர். இந்த நேரத்தில் தான் நீட் வந்த பிறகு 2 ஆண்டுகள் மருத்துவப் படிப்பிற்கு மாணவிகள் செல்வதில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு 7.5% உள்இடஒதுக்கீடு வழங்கியது. அதன் பிறகு கடந்த 2020 ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தொடர்ந்து 19 மாணவிகள் மருத்துவம் படிக்கச் சென்றுள்ளனர். இந்த தொடர் சாதனையை தக்க வைக்கும் விதமாக இந்த ஆண்டும் 4 மாணவிகள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இதில், நீட் கோச்சிங் சென்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து பல்வேறு ஆன்லைன் மூலம் படித்து நீட் தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று 7.5% உள் இடஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க தேர்வாகி உள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயாவின் குடும்ப வறுமையின் பின்னனி கண்கலங்க வைக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாய கூலி வேலை செய்து வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு குடும்ப பாரத்தை சுமக்கத் தொடங்கினார் அவரது மனைவி அன்னபூரணி. தினக்கூலி வேலை செய்தாலும் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கீரமங்கலம், வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் ஒரு வாடகை வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் தங்கினார். பின்பு, அவர் சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதில், மூத்த பெண் தான் அபிநயா. இவர் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு +2 படித்தவர் நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க வேண்டும் என்று சொன்ன போது, மகளின் ஆசையை நிறைவேற்ற கடன் வாங்கி திருச்சியில் ஒரு தனியார் கோச்சிங் சென்டருக்கு அனுப்பினார் தாய் அன்னப்பூரணி. ஆனால் போதிய மதிப்பெண் பெறவில்லை. அதனால் வேறு பட்டப்படிப்பு படிக்கலாம் என்று சொன்ன போது குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்ட அபிநயா இந்த முறை எனக்காக கடன் வாங்க வேண்டாம். வீட்டில் இருந்தே படிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அதனை தொடர்ந்து தன்னிடம் இருந்த புத்தகங்களையும், இணைய வழியில் நீட் தேர்வு பற்றி வரும் பாடங்களையும் ஓய்வு, உறக்கமின்றி படித்து சொன்னது போலவே 496 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் 7.5% உள் இடஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க சீட்டு தேர்வு செய்துள்ளார். இவரது தங்கை சுவாதி, திருப்பூரில் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி படிக்கிறார். தம்பி சபரிவாசன், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார்.
இது குறித்து அபிநயாவின் தோழிகள் கூறும் போது, ‘ரொம்ப ரொம்ப வறுமையான குடும்பம். அவங்க அம்மா வீடு வீடாக வேலை செய்து அந்த சம்பளத்தில் இதுவரை படிக்க வச்சுட்டாங்க. மற்ற பிள்ளைகளின் படிப்பு, உணவு, உடை மற்ற தேவைகளையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், இப்ப அபிநயாவுக்கு அட்மிசன் போட போக கூட அவங்க வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்காங்க. மருத்துவ சீட்டுக்கு முழு கல்வி கட்டணமும் அரசு செலுத்தும். ஆனால் பொருட்கள் வாங்கனும், நடைமுறைச் செலவுகள் உள்ளதே அதற்காக அவங்க தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கண்கலங்கியபடி கூறினர். அபிநயா கூறுகையில், ‘அப்பா இல்லை, நாங்க படிக்கனும் என்பதற்காக கீரமங்கலத்தில் ஒரு வாடகை வீட்டுக்கு வந்துட்டோம். அம்மா சில வீடுகள்ல வீட்டு வேலை செஞ்சு இதுவரை படிக்க வச்சுட்டாங்க. மறுபடி கோச்சிங் போனா பணம் கட்ட முடியாதுனு வீட்ல இருந்தே படிச்சு இப்ப சீட்டும் வாங்கிட்டேன்’ என்று சொல்லும் போதே குரல் கம்மியதை நம்மால் உணர முடிந்தது. பணம் இல்லாமல் ஒரு ஏழை மாணவியின் படிப்பு கனவு சிதைந்து போகக் கூடாது. உதவி நினைப்பவர்கள் இது போன்றவர்களுக்கு உதவலாம்.