உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு அக். 09 அன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர் அருகிலுள்ள ஆவரைக் குளத்தில் பிரச்சாரமும் நடைபெற்றிருக்கிறது. அதுசமயம் நெல்லை பா.ஜ.க.வின் உறுப்பினரான பாஸ்கர் பிரச்சாரத்திலிருந்திருக்கிறார். பின்னர் அது தொடர்பாக ஒருசிலரோடு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து பாஸ்கரை மர்ம நபர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த முன்னாள் மத்திய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை முன்பு கட்சியினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் இரவு நெல்லை ஜங்ஷன் காவல் நிலையம் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர் அங்கேயே விடிய விடிய இருந்த அவர், காவல் நிலையத்திலேயே இரவு படுத்து உறங்கினார். விடிந்த பின்பு கிளம்பிச் சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்.இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர் காவல் நிலையத்தில் படுத்து உறங்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.