கடந்த 16 ந் தேதி தஞ்சை பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட வேட்பாளர் செல்வராஜ் பிரச்சாரத்தில் இறுதி நாளில் தொகுதியில் பல இடங்களிலும் மிகப் பெரிய ஊர்வலத்தை நடத்தினார். அதன் பிறகு அவர் சார்ந்துள்ள சமூகத்தின் பெண்களை இழிவாக பேசும் உரையாடல் கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அது சம்மந்தமாக அடுத்த நாள் வேட்பாளர் செல்வராஜ் தரப்பு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு வாக்குப்பதிவு நாளில் ஒரத்தநாடு அருகில் உள்ள பொட்டலங்குடிக்காடு என்னும் கிராமத்தில் உள்ள அந்த சமூக பெண்கள் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் புறக்கணித்தனர். அதன் பிறகு வேட்பாளர் செல்வராஜ் தரப்பு சமாதானம் செய்து வாக்களிக்க அழைத்துச் சென்றனர்.
இந்தநிலையில் இந்த ஆடியோ வேகமாக சமூகவலைதளங்களில் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இளைஞர்கள் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தனர். அதன் பிறகு மக்கள் திரண்டு காவல் நிலையம் முற்றுகை, பேருந்து நிலையம் முற்றுகை, சாலை மறியல் என்று 49 ஊராட்சிகளிலும் பரவியதால் பதற்றம் நிலவியது. தடியடி, கல்வீச்சு சம்பவங்களால் 144 தடை உத்தரவும், ஆயிரம் பேர் மீது வழக்கும் போடப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் மற்ற இடங்களில் போராட்டம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பொன்னமராவதியில் இன்று காலை முதல் போராட்டங்கள் இல்லை என்றாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது. அனைத்து இடங்களிலும் போலிசார் மட்டுமே இருந்தனர். இதனால் பொதுமக்கள் வருகை குறைந்து பெரிய சந்தைகள் இயங்கவில்லை. பஸ் போக்குவரத்து மாலைக்கு பிறகு தொடங்கி உள்ளது.
பொன்னமராவதி சுற்றியுள்ள கிராமங்களில் இயல்புநிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வரும் நிலையில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வாட்ஸ் நிறுவனத்தின் உதவியையும் நாடியுள்ளனர்.