கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சின்ன கண்டியாங்குப்பம் கிராமத்தில் சிறு, குறு விவசாயிகள் முதல் அதிக நிலங்கள் கொண்ட பெரிய விவசாயிகள் வரை, சுமார் 100 -க்கும் மேற்பட்ட ஏக்கரில் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். அதிக லாபம் ஈட்டக்கூடிய கத்திரிக்காய் சாகுபடியில் நன்றாக பூக்கள் மற்றும் கத்தரிக்காய் காய்த்து வந்த நிலையில், தொடந்து சில நாட்களாக பொழிந்து வரும் தொடர் மழையால் அனைத்து விவசாயகளின் நிலத்தில் இருந்த, கத்தரிக்காய் செடிகள் தரையில் வேரோடு சாய்ந்ததில், பூக்கள் உதிர்ந்தும், காய்கள் அழுகியதால் விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். மேலும் சாய்ந்த கத்திரிக்காய் செடிகளை, சரி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டாலும், அச்செடியானது பழைய நிலைக்குத் திரும்பி, பூக்கள் பூக்குமா என்பது கேள்விக்குறியாகதான் உள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதேபோல் விருத்தாசலம் அருகே செல்லும் ஒடையினை சரியாக தூர்வாரததால் 30 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. திருமுட்டம் தாலுக்காவிற்கு உட்பட்ட கீரனூர், மேலப்பாளையூர், மருங்கூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு, நெல் உள்ளீடவைகளை விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகளின் நலனுக்காக திட்டக்குடியில் உள்ள வெலிங்கடன் நீர்தேக்கத்தில் இருந்து வருகின்ற பல்வேறு ஒடைகளில் ஒரு பகுதி வல்லியம், மேலப்பாலையூர், கீரனூர் வழியாக கடந்து இறுதியாக மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிக்கு சென்றடைகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், வயலில் உள்ள மழைநீர் ஒடையை நோக்கி செல்கிறது. ஆனால் ஒடையை சரிவர தூர்வாரமல் இருப்பதினால் மழை தண்ணீர் செல்லமுடியாமல், சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தமிழக அரசு ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணியில் ஈடுப்பட்டாலும், ஒரு சில அதிகாரிகளின் அலட்சியபோக்கால் கீரனூர், மேலப்பாலையூர், மருங்கூர் கிராமங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் குமாரமங்கலம் அருகே மணிமுக்தாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பனையில் தண்ணீர் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் உயருவதாகவும் தனிப்பட்ட ஒரு நபர் தடுப்பனையில் தண்ணீரை தேக்கவிடாமல் திறந்து விடுவதினால், பாசன வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரும் நெற்பயிற்களை மூழ்க அடிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட, ஒடையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.