தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12- ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.
இந்த நிலையில், ஜனவரி 12- ஆம் தேதி மதுரைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் 1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, அரசு மற்றும் தனியார் பொங்கல் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "மதுரையில் வரும் ஜனவரி 12- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா மற்றும் ஒமிக்ரான் அதிகரிப்பு காரணமாக, பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறாரா என்பது குறித்து மாநில அரசுதான் கூற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.