
















விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (28). திருவான்மியூரைச் சேர்ந்த இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, நடிகை சித்ரா நேற்று (09/12/2020) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை குறித்து தகவலறிந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரின் தொலைப்பேசியை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருவள்ளூர் வட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை, இன்று காலை தொடங்கிய நிலையில், சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. பிரேதப் பரிசோதனை முடித்து சித்ராவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடிகை சித்ராவின் உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள், உறவினர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.