
மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி என்ற ஒன்றிய அரசின் அடாவடியை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ஒரு மொழிப் போராட்டத்திற்கான வழிவகுத்துள்ளது ஒன்றிய அரசு. பா.ஜ.க அல்லாத கட்சிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஒன்றிய அரசுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்தியை திணிக்காதே என்று முதல் கட்டமாக கோலம் போடும் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டங்களும் தொடங்கி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் மாணவர்கள் போராட்டங்களும் வெடிக்கும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இந்தி திணிப்புக்கு எதிராக வீட்டு வாசலில் கோலம் போடப்படுவது தொடரும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கறம்பக்குடி யுவராஜா மகள் மழலையர் வகுப்பு படிக்கும் 4 வயது சிறுமி தாரா இந்தியை திணிக்காதே! கல்வி நிதியை உடனே வழங்கு! என்ற பதாகையுடன் கடைவீதியில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து செவ்வாய்பட்டியிலும் இதே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஒரு மழலையின் இந்த பிரச்சாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இனிமேல் இது போன்ற பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கலாம் என்கின்றனர்.